Monday, December 17, 2018

கொட்டமடித்த தினகரன்? கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்? பெங்களூர் பரபரப்பு!!


தினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது.

 ஒருவர் தங்க.தமிழ்ச்செல்வன் மற்றொருவர் கதிர்காமு. இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சில தினங்களுக்கு முன்பு எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று, தங்க தமிழ்ச்செல்வனும், கதிர்காமுவும் காத்திருந்தார்களாம். கொஞ்ச நேரத்தில் அந்த ஹோட்டலுக்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வந்திருக்கிறார். இருவருடனும் தங்கமணி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறார். 

அப்போது தங்கமணி, ’இப்படியே போனால் எதிர்காலம் என்ன ஆகும்னு யோசிங்க. உங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்ய தயாராக இருக்கோம். உங்களுக்கு (தங்க தமிழ்ச்செல்வன்) முன்பே அமைச்சர் பதவி கொடுக்க அண்ணன் ரெடியாகத்தான் இருந்தாரு. தேர்தல் வந்தால், நீங்க போட்டியிட்ட அதே தொகுதிகளில் ரெண்டு பேரும் போட்டியிடுங்க. செலவை பற்றி கவலை வேண்டாம். நாங்க பார்த்துக்குறோம். ஜெயிச்சதும் உங்களுக்கு அமைச்சர் பதவி தேடி வரும். அதுக்கு நான் கியாரண்டி..’ என்று சொன்னாராம்.

 அதற்கு தங்க தமிழ்ச்செல்வன், ‘நானும் சரி... கதிர்காமுவும் சரி... ரொம்பவே டீசன்ட்டா அரசியல் பண்றோம். ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து அரசியல் செஞ்சதாலதான் ஆரம்பத்துல இருந்தே எங்க மீது அவரு கோபத்துல இருக்காரு. இப்போ நாங்க அங்கே வந்தாலும் அவரு எங்களுக்கான மரியாதையை கொடுப்பாரான்னு தெரியாது. கட்சியில் எங்களை வளர விடுவாரான்னும் தெரியாது. அப்புறம் எந்த நம்பிக்கையில் நாங்க வர முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்.

 அதற்கு அமைச்சர் தங்கமணி, ‘உங்களை விட அதிகமா யோசிக்கிறவன் நான். உங்களை சந்திக்க வருவதற்கு முன்பே அண்ணன் ஓ.பி.எஸ்,கிட்ட பேசிட்டேன். அவரால உங்களுக்கு இனி எந்த சிக்கலும் வராது. அவருகிட்ட பேசிட்டோம். நீங்க நம்பி வரலாம்...’ என்று சொல்லி இருக்கிறார். இப்படியாக பேச்சுப் போய்க் கொண்டிருக்க.. திடீரெனெ பன்னீருக்கு போன் போட்டுக் கொடுத்துவிட்டாராம் தங்கமணி.

 ‘நடந்தது எதையும் யோசிக்க வேண்டாம். நானும் அதையெல்லாம் மறந்துட்டேன். நீங்களும் மறந்துடுங்க. வாங்க எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம்...’ என்று பன்னீர் சொன்னாராம். ‘நான் எதுவும் தப்பா நினைக்கலைங்க...’ என்று தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சு அத்துடன் மாறிவிட்டதாம். அதிமுகவில் இணைவதற்கு இருமனதாக தமிழ்ச்செல்வன் தலையாட்டிவிட்டு, ‘கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்க...’ என்று கேட்டிருக்கிறார்.

 லீலா பேலஸ் ஹோட்டல் சந்திப்புக்கு பிறகு, தினகரனை சந்தித்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது, சில விஷயங்களை வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

செந்தில்பாலாஜி திமுக பக்கம் போகப் போறாருன்னு 3 மாசத்துக்கு முன்பே உங்ககிட்ட சொன்னேன். அப்போ நீங்க, சின்னம்மாவை பார்க்கப் போனீங்க. ‘யாரு வேணும்னாலும் போகட்டும்’னு சின்னம்மாவே சொன்னதாக சொன்னீங்க. ஆனா சின்னம்மா அப்படி சொன்னாங்களான்னு எங்க எல்லோருக்கும் சந்தேகம் இருக்கு. அப்பவே செந்தில்பாலாஜியோட பேசி இருந்தால் இப்போ அவரு போயிருக்கவே மாட்டாரு...’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு தினகரனோ, ‘நான் என்னவோ சின்னம்மாகிட்ட பேசாமல் நானே வந்து சொன்ன மாதிரி சொல்றீங்க.... ‘ என்று கேட்டிருக்கிறார். ‘பல எம்.எல்.ஏ.க்கள் அப்படித்தான் நினைக்கிறாங்க...’ என்று தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

 அப்போதைக்கு தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாராம் தினகரன். அதன் பிறகுதான், தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசியது தினகரன் கவனத்துக்குப் போயிருக்கிறது.

 பதறிப்போன தினகரன் மீண்டும் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘சின்னம்மாவை பார்க்க நான் பெங்களூரு போறேன். நீங்களும் வாங்க. மற்ற எம்எல்ஏக்கள் யாரு வராங்களோ எல்லோரையும் கூட்டிட்டுப் போவோம்...’ என்று சொல்லி இருக்கிறார். தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப்படுத்தவே பெங்களூருக்கு அழைத்திருக்கிறார் தினகரன்.

 நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏக்களுடன் சசிகலாவை பார்த்திருக்கிறார். அப்போது, செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லையாம். சாதாரணமாக நலம் விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டாராம். 12 பேரும் வெளியே வந்த பிறகு தினகரன் மட்டும் 20 நிமிடங்கள் சசிகலாவுடன் தனியாகப் பேசிவிட்டு வந்திருக்கிறார். பெங்களூரு ஹோட்டலில் வைத்து தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப்படுத்தும் முயற்சியையும் தொடர்ந்து வருகிறார் தினகரன்” #நன்றி Minnambalam.com 

இதற்கிடையே காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுடன் கூட்டணி குறித்த ரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்த தினகரனின் முயற்சிகளைத் திமுக தலைவர் முறியடித்துள்ளார்...

 ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில், பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள, 40 தொகுதிகளையும், பா.ஜ., கூட்டணி கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா வாயிலாக, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மேலும், தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பிரச்னை ஏற்பட்டு, காங்கிரஸ் தலைமையில், அ.ம.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் இணைந்த, மூன்றாவது அணி அமைக்க முடியாத அளவிற்கு, ஸ்டாலின் திட்டமிட்டு காய் நகர்த்தி உள்ளார். அதே சமயம், பிரதமர் வேட்பாளர் பதவிக்கு, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி, சரத் பவார் போன்ற தலைவர்கள் போட்டி போடுவதற்கும், முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

 இதனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் கூட்டணி அமைத்தாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, பிளவுபட்டு உள்ள, அ.தி.மு.க., ஒன்றானால் தான், அக்கட்சியின் ஓட்டுகள் மொத்தமாக, பா.ஜ., கூட்டணிக்கு கிடைக்கும் என, டில்லி மேலிடம் கருதுகிறது. எனவே, அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைய வேண்டும் என்ற விருப்பத்தை, பா.ஜ., மேலிடம், முதல்வர் பழனிசாமி தரப்புக்கு தெரிவித்துள்ளது.

தமிழக தலைவர் ஒருவர் வழியாக, இதற்கு தூதும் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து, இணைப்பு குறித்த பேச்சு, திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் இணைந்த பின், முதல்வர் பதவிக்கு பழனிசாமியும், பொதுச்செயலர், துணை முதல்வர் பதவிக்கு பன்னீர் செல்வமும், துணை பொதுச்செயலர் பதவிக்கு தினகரனும் தேர்வு செய்யப்படலாம் என, பேசப்பட்டுள்ளது.

மேலும், அவைத் தலைவர் பதவிக்கு பொன்னையன், பொருளாளர் பதவிக்கு செங்கோட்டையன் ஆகியோர் தேர்வு செய்யப்படுவது குறித்தும், இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு உள்ளது.

 தினகரன் பிடிவாதம்!

 இதில், பொதுச்செயலர் பதவியை, சசிகலாவுக்கு தர வேண்டும் என்றும், தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும், தினகரன் முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், முரண்டு பிடிக்கும் தினகரனை, 'கழற்றி' விட்டு, மற்றவர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டமும், இரு தரப்பிலும் உள்ளது.

அதேபோல், பொதுச்செயலர், முதல்வர், இரண்டு பதவிகளும், தனக்கு வேண்டும் என, பழனிசாமியும் கொடி பிடிப்பதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில்,

நேற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, தினகரனும், அவரது ஆதரவாளர்களும் சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தினர்.இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:இந்த ஆண்டின் இறுதிக்குள், இரு கட்சிகளும் இணைந்து விட்டால், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு மற்றும் தினகரன் மீதான தேர்தல் கமிஷன் வழக்கு , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம்,உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Share:

Labels

Unordered List

Definition List