இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில் முறைகேடு ! மூவர் கைது!


காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் பணியாளர்களை நியமிப்பதற்கான தேர்வுகளை, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் 8,888 பணியிடங் களுக்கான தேர்வை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. மொத்தம் 3,25,000 பேர் தேர்வு எழுதினார்கள். எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக 8,888 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அதில், விளையாட்டு வீரர்களுக்கான பத்து சதவிகித இடஒதுக்கீட்டில் ஏராள மானோர் தேர்வாகியிருந்தனர்.

அவர்களில் 800-க்கும் மேற்பட்டோர் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என்ற விவகாரம்தான் தற்போது பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

குரூப்-4 தேர்வு முறைகேடு அம்பலமான ராமநாதபுரம் மாவட்டத்திலேயேதான் சீருடைப் பணியாளர் தேர்வு முறைகேடும் அம்பலமாகியிருக்கிறது. ‘போலிச் சான்றிதழ் கொடுத்து விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிலர் காவலர்களாக பணியில் சேர்ந்துள்ளனர்’ என்று, சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-யான வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார் வருண்குமார். கமுதியை அடுத்து உள்ள ஓ.கரிசல்குளத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்ற ஏஜென்டை முதலில் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் என்பவருக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கபடி பயிற்சியாளரான சீமான், சினிமாவில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட தன் புகைப்படங்களை கடலாடி இளைஞர்களிடம் காட்டி தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டார். தொடர்ந்து அவர் போலீஸில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சங்களை வசூலித்துள்ளார். இதுதவிர, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றதாக போலிச் சான்றிதழ்களையும் தயாரித்துக் கொடுத்துள்ளார். அவற்றை வைத்துதான் பலர் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளனர்.இதை தொடர்ந்து சீமான், ராஜீவ் காந்தி மற்றும் அவர்களிடம் போலிச் சான்றிதழ் பெற்று திருச்சி ஆயுதப்படையில் பணியில் சேர்ந்த ஓ.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் ஆகிய மூவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
 அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கமுதி வேப்பங்குளத்தைச் சேர்ந்த முத்துமணி, முதுகுளத்தூரைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகிய இருவரும் ராஜீவ் காந்தியிடம் தலா 30,000 ரூபாய் கொடுத்து போலிச் சான்றிதழ் பெற்று, சமீபத்தில் நடந்த காவலர் தேர்வின்மூலம் பணிக்குத் தேர்வானது தெரியவந்தது. இதேபோல், ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த தவமுருகன் என்பவர் சீமானிடம் 17,000 ரூபாய் கொடுத்து தேசிய கபடி வீரர் என்று போலிச் சான்றிதழ் பெற்று, அதன்மூலம் சமீபத்தில் நடந்த இந்தோ-திபெத் எல்லை காவல்படை பணிக்குத் தேர்வானதும் தெரியவந்தது. இவர்கள் மூவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இதை தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட அனைவரின் சான்றிதழ்களையும் ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளது காவல்துறை. இதுகுறித்து மாவட்ட விளையாட்டுக் கழகத்தில் பொறுப்பு வகிக்கும் விளையாட்டு வீரர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளில் எப்போது அரசியல்வாதிகளும் முக்கியப்புள்ளிகளும் நுழைந்தார்களோ, அப்போதே முறைகேடுகள் தொடங்கிவிட்டன. அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். வேலைக்காக மட்டுமல்லாமல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்குவதற்கும் விளையாட்டுத் துறை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. இன்றைக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா என்பது பணம் கொழிக்கும் விஷயமாக மாற்றப்பட்டுவிட்டது.

சீருடைப் பணியாளர் தேர்வு
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் மாவட்ட அளவில் பல சங்கங்கள் உள்ளன. அவை நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் சான்றிதழ் வழங்கலாம். இதில் ஒருசில சங்கங்கள் மட்டும்தான் நேர்மையுடன் செயல்படுகின்றன. உண்மையான விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல், பணத்துக்காக தகுதியில்லாதவர்களுக்குச் சான்றிதழ்களைக் கொடுக்கிறார்கள்.

சமீபத்தில்கூட மாநில அளவில் விளையாட்டு ஆலோசனை கமிட்டி ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது. அதில் காந்த் மட்டும்தான் விளையாட்டு வீரர். மற்ற அனைவரும் பிரபல கல்லூரிகளின் உரிமையாளர்கள்தான். பிறகு எப்படி விளையாட்டுத் துறை மேம்படும்?” என்றார்.

Post a Comment

0 Comments